"அம்மா மினி கிளினிக்" திட்டம்... இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 5234
தரமான மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்க, தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

தரமான மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்க, தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். 

மக்களுக்கு அன்றாடம் ஏற்படும் நோயை குணப்படுத்த தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் முதலமைச்சர் அறிவித்திருந்தார். தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு உதவியாளர் இடம்பெறுவார்கள் என்றும், எளிதாக சிகிச்சை அளிக்கக்கூடிய நோய்களுக்கு மினி கிளினிக்கில் மருந்துகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, முதல் அமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. சென்னை ராயபுரம், வியாசர்பாடி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனைத் தொடங்கி வைக்கிறார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் மொத்தம் 200 மினி கிளினிக் செயல்பட உள்ள நிலையில், 47 இடங்களில் முதல்கட்டமாக மினி கிளினிக் அமைக்கப்படுகிறது. இதில் 20 இடங்களில் இன்று முதல் மினி கிளினிக் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் மினிகிளினிக் திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.இதன் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் எளிதாக சிகிச்சை பெற அரசு வழிவகை செய்துள்ளது.

மினி கிளினிக்குகளில் ரத்தம் அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, மகப்பேறு பரிசோதனை வசதிகள் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதனுடன் இ.சி.ஜி. கருவி, பல்ஸ் ஆக்சிமீட்டர், வெப்பநிலை கண்டறியும் தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட அடிப்படை மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மினி கிளினிக்குகள், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கிராமப்புறங்களில் மட்டும் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். இங்கு, காய்ச்சல், தலைவலி போன்ற எளிதான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், கொரோனா தொற்று இருக்கிறதா? என்பதையும் கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு, பெரிய மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தொடர்ந்து, வரும் 16-ந்தேதி சேலம் மாவட்டம் எடப்பாடியில், அந்த மாவட்டத்துக்குரிய 40 மினி கிளினிக்குகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments